புதன், 18 நவம்பர், 2026

சுகமான அவமானங்கள், P04 (Updated)

நாங்கள் இரண்டு வருடம் முன்பு வரை நகரத்தின் மைய பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தோம். அந்த வீட்டில் இருந்து எனது கல்லூரி, சுமதியின் பள்ளி இரண்டும் அருகருகே இருந்ததால், நாங்கள் இருவரும் நடந்தே சென்று விடுவோம்.

நான் கல்லூரி படிப்பை முடித்த போது தான், என் அப்பா வெளி நாட்டில் சம்பாதித்த பணத்தை வைத்து, ஊருக்கு சற்று ஒதுக்கு புறமாக, நன்கு வளர்ந்து வரும், இந்த இடத்தில் வீடு வாங்கி குடியேறினோம்.

அப்போது சுமதி பிளஸ் ஒன் படிக்க தொடங்கினாள். நல்ல வேலையாக அவளுக்கு அப்போது அரசாங்கம் கொடுத்த இலவச மிதிவண்டி கிடைத்தது. அவளுக்கு கிடைத்தது பெண்கள் மாடல், பிங்க் கலர் பார் இல்லாதது. அவள் அதை ஓட்ட கற்று கொண்டு, அதில்தான் பள்ளி கூடம் சென்று வந்தாள். இப்போதும் அதில்தான் கல்லூரிக்கு சென்று வருகிறாள்.

அமுதா கூட அதே போல ஒரு லேடீஸ் சைக்கிள் வைத்து இருக்கிறாள். அதில் தான் அவளும் கல்லூரிக்கு செல்வாள். அவள் அப்பாவின் புல்லட் ஐ கல்லூரிக்கு எடுத்து செய்வதில்லை.

இப்போது என் தங்கை சுமதி மற்றும் அமுதா 18 வயது ஆனதால், ஒரு மாதத்தில் அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு ட்ரைவிங் ஸ்கூல் மூலம் ஓட்டுநர் உரிமம் கூட எடுத்து விட்டார்கள்.

இப்போது என் அப்பா விடுமுறையில் வந்து உள்ளார்கள். அதே நேரம் அமுதாவின் அப்பாவும் இங்கு உள்ளார்கள். இருவரும் நண்பர்களாகி விட்டனர்.

என் அப்பாவும், அமுதாவின் அப்பாவும் வந்து இருந்தபோது நாங்கள் அனைவரும் சேர்ந்து சினிமா (ப்ளாஸ்ட் - BLAST அர்ஜுன், ப்ரீத்தி முகுந்தன் படம்) பார்க்க சென்று இருந்தோம்.

படம் பார்த்து முடிந்தவுடன், ஒரு உணவகத்துக்கு சாப்பிட சென்றோம். 

அப்போது அமுதா வீட்டில் எப்போதும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு போரடித்து விட்டது, இன்று வித்யாசமாக பஞ்சாபி டிஷ் ஆர்டர் செய்து சாப்பிடலாம் என்று சொல்ல, எல்லோரும் அப்படியே வாங்கி சாப்பிட்டு கொண்டு இருந்தோம்.

அமுதா: இந்த மாதிரி உணவெல்லாம் வீட்டுலயும் அவ்வப்போது செய்து கொடுத்தால் எப்படி இருக்கும்.

அமுதா அம்மா (மாமி): அடியே எனக்கெல்லாம் இது செய்ய வராது, நீயும் சமையல் அறை பக்கமே வர மாட்ட. இப்படி எப்பவாவது ஹோட்டல் வரும்போது சாப்பிட்டுக்கோ.

அமுதா: ஹேய் சுதா, உனக்கு தான் நல்லா சமைக்க தெரியுமே. நீ ட்ரை பண்ணேன்.

சுதா: அவ்வளவுதானா, நீங்க விரும்பி கேட்டதால், இந்த வாரமே செய்து அசத்திடுறேன்.

இப்படி நாங்க பேசி கொண்டு இருக்கும் போது அமுதாவின் அப்பாவும், என் அப்பாவும் அன்று பார்த்த படத்தை பற்றி பேசி கொண்டு இருந்தார்கள். அதில் அர்ஜுன் மகள் ப்ரீத்தி கராத்தே போடும் அழகை பார்த்து சுமதியையும், அமுதாவையும் அதே போல கராத்தே கிளாஸ் சேர சொன்னார்கள்.

என் அம்மா: ஆமாம் அமுதாவும், சுமதியும் கராத்தே கிளாஸ் சேரட்டும், சுதா சமையல் கிளாஸ் ல சேர்ந்து விதவிதமா சமைக்க கத்து கிட்டு, அவங்களுக்கு சமைத்து போடட்டும்.

என் அம்மா அப்படி சொன்னதை கேட்டு அனைவரும் சிரித்தனர்.

மாமி: இதில் சிரிக்க என்ன இருக்கு, யார் யாருக்கு என்ன என்ன பிடிக்கிறதோ, என்ன செய்ய வருகிறதோ, அதை அவங்க பண்ண விடணும், பொண்ணுங்க கராத்தே கத்துகிற போது, பசங்க சமைக்க கத்துகிறதுல என்ன கேவலம் இருக்கு, இந்த ஹோட்டல் ல சமைக்கிறது எல்லாம் ஆம்பிளைங்க தானே. சுதா நீ சமையல் கத்துக்கிட்டு, அடுத்த வாரம் உன் அப்பாவும், மாமாவும் திரும்ப வேலைக்கு செல்வதற்கு முன்பாக ஒரு நாள் விருந்தே வைத்து அசத்துடா அவங்களை, நான் உனக்கு ஹெல்ப் பண்றேன்.

மாமா: சுதா, அமுதா சொல்லி இருக்கா, நீ நல்லா சமைப்பனு, நான் ரெடி உன் சாப்பாட்டை சாப்பிட, ஆனால் மாமி ஹெல்ப் மட்டும் எடுத்துக்காத, அப்புறம் சாப்பாடு டேஸ்ட் போய்டும்.

என்று சொல்லி சிரிக்கிறார். மாமி கோபமாக மாமாவை பார்த்து முறைக்க, அவர் “ஹேய் சும்மா ஒரு தமாசுக்கு” என்று சொல்லி சிரிக்கிறார்.

அமுதா: அப்பா, சுதா சமைக்குற சாப்பாட்டை நீங்க சாப்பிட்டா, நீங்க அடிக்கடி சொல்வீங்களே, நல்லா சமைக்குற கைக்கு வளையல் வாங்கி போடணும்னு, கண்டிப்பா அந்த சமைத்த கைக்கு வளையல் வாங்கி கொடுப்பீங்க, அப்படி இருக்கும் சுதா சமையல்.

அமுதா அப்படி சொன்னதை கேட்டு அனைவரும் சிரிக்க, எனக்கு அவள் சொல்வதை பாராட்டாக எடுத்து கொள்வதை விட, எங்கே எல்லோரும் என்னை அவமானமாக பார்க்கிறார்களோ என்று சிறிது சந்தேகம் வந்தது. சற்று நெளிந்தேன், அந்த சுகமான அவமானத்தில்.

என் அம்மா: என் பையனுக்கு வளையல் போடுறது அப்புறம் இருக்கட்டும், முதல்ல நீங்க ரெண்டு பேரும், கொஞ்சமாவது எங்களுக்கு வீட்டுல ஹெல்ப் பண்ணுங்க, நாளைக்கு கல்யாணம் பண்ணிட்டு போற இடத்துல எங்க மானத்தை வாங்க போறீங்க.

என் அப்பா: இப்பல்லாம் காலம் மாறி போச்சு, பொண்ணுங்க வீட்டுல வேலை பார்க்கணும் னு கட்டாயம் இல்லை, அவங்க இஷ்டம் போல வாழட்டும். அதேபோல ஆம்பிளை பசங்க வீட்டு வேலை பார்ப்பது ஒன்னும் கேவலம் இல்லை. நானே வெளி நாட்டுல எனக்கு நானே சமைத்து சாப்பிட்டு வருகிறேன். வீடு பெருக்குறது, தோய்க்கறது உட்பட அணைத்து வீட்டு வேலை எல்லாம் நான்தானே செய்றேன்.

என் அப்பா சொன்னதை கேட்டு சுமதியும், அமுதாவும் கை தட்டி அவரை பாராட்டினார்கள். அதனால் அப்போது அந்த இடம் ஒரு சந்தோச பூங்காவாக மாறியது, எப்படியோ என் வளையல் டாபிக் மறந்து விட்டது என்று நான் சந்தோச பட்டேன்.

------------------------------------

அந்த வாரத்தில் என் அப்பாவும், மாமாவும் சொன்னது போலவே, சுமதியையும், அமுதாவையும் கராத்தே கிளாஸ் ல சேர்த்து விட்டார்கள்.

நான் YouTube பார்த்து பஞ்சாபி சமையல் செய்வது எப்படி என்று கற்று கொண்டு விட்டேன்.

அதே வாரத்தில், என் அப்பாவும், மாமாவும், தங்கள் மகள்களுக்கு தினமும் சைக்கிள் ஒட்டி கல்லூரி செல்வதில் உள்ள சிரமத்தை உணர்ந்து, புதிய ஸ்கூட்டி வாங்கிக் கொடுக்க முடிவு செய்து, அதே போல வாங்கி கொடுத்தும் விட்டனர்.

அமுதா பிங்க், சுமதி பர்பிள் கலர் ஸ்கூட்டி வாங்கி கொண்டனர். அதன் பதிவு வேலைகள் எல்லாம் முடிந்து, அவர்கள் இருவரும் இப்போது அதில் கல்லூரிக்கு செல்ல தொடங்கி விட்டனர்.

அந்த வார இறுதியில், எல்லோருக்கும் எனது வீட்டில் பஞ்சாபி சமையல் சமைத்து, சாப்பிட கூப்பிட்டு இருந்தேன்.

அன்று இரவே அப்பாவும், மாமாவும் மீண்டும் வேலைக்கு திரும்பும் நாள் வேறு வந்து விட்டது.

அன்று எல்லோரும் நான் சமையல் செய்வதை பார்த்து, மீண்டும் என்னை சுமதியின் தங்கை என்று கிண்டல் செய்வார்களோ என்ற எண்ணத்தில், வழக்கமான தளர்வான உடைகளை அணியாமல், இறுக்கமான ஜீன்ஸ் பாண்ட் போட்டு இருந்தேன்.

ஜீன்ஸ் பாண்ட் போட்டு சமையல் செய்வது மிகவும் கடினமாக இருந்தது, எனினும் வேறு வழி இன்றி அப்படியே சமைத்து முடித்து விட்டேன். முதல் முறையாக பஞ்சாபி சமையல் சமைத்தாலும், அதுவும் YouTube பார்த்து கற்று கொண்டு சமைத்தாலும், சமையல் நான் எதிர் பார்த்ததை விட நன்றாகவே வந்து இருந்தது.

அனைவரும் என் சமையலை ரசித்து சாப்பிட்டனர்.

மாமா: சுதா உண்மையிலேயே உன் கையில் ஏதோ மாஜிக் இருக்கிறது, உன் கை பக்குவம் பிரமாதம், நான் இதுவரை இந்த மாதிரியான சுவையான சமையலை வீட்டில் சாப்பிட்டதில்லை, நீ மட்டும் சுமதியின் தங்கையாக இருந்திருந்தால் நிச்சயம் உன் கைக்கு வளையல் வாங்கி போட்டு விடுவேன். உனக்கு என்ன வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமானாலும் என்னிடம் தயங்காமல் கேள்.

நான்: நன்றி மாமா, உங்கள் அன்பு, பாராட்டு போதும், இப்போதைக்கு வேறு ஏதும் தேவை இல்லை, ஏதும் தேவை பட்டால் கண்டிப்பாக உங்களை கேட்பேன். என்னை சுமதியின் தங்கை என்று மட்டும் சொல்லாதீர்கள் இப்போதைக்கு" என்று நான் சொல்ல எல்லோரும் சிரித்து விட்டனர்.

அப்போது அமுதா 'யார் சொன்னாலும், சொல்ல விட்டாலும், என் மனதில் நீ சுமதியின் தங்கை என்ற எண்ணம் வந்து விட்டதை இனி மாத்த முடியாது, என்னை பொறுத்த வகையில் நீ எப்போதும் சுமதியின் தங்கை தான்' என்று சொல்லி கிண்டல் செய்தாள்.

“போங்க, நீங்க ரொம்ப மோசம்" என்று நான் வெட்கத்துடன் சமையல் அறைக்குள் சென்று பதுங்கி கொண்டேன்.

வெளியில் எல்லோரும் கிண்டலாக சிரிக்கும் சத்தம் கேட்டது.

அந்த சுகமான அவமானம் எனக்கு ரொம்பவே வேண்டி இருந்தது.